
Gnana Oli – January 2025
A fine collection of moments in time featuring photographs, articles and blessings of Sathguru Sri Gnanananda Giri Swamigal.
Buy your copy from Thapovanam book stall.
முதல் இதழில் ஸற்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள் அளித்த ஆசி மொழிகள்!
1958இல் ‘ஞான ஒளி’ முதல் இதழ் வெளியிடும் பொழுது குருநாதர் அளித்த ஆசி மொழிகள்…
ஓங்காரத்தின் உள்ளே ஒப்பற்ற பேரின்ப ஒளி திகழ்கிறது. அவ்வொளிக்குள் அண்டபகிரண்டங்கள், சராசர உயிர்கள் உலக நாம ரூபங்கள் யாவும் இயங்குகின்றன. அவ்வொளி மக்கள் உள்ளத்தில் உயிர் ஒளியாய் நின்று விளங்குகின்றது.
இவ்விதம் மக்களின் உள்ளத்தில் ஒளி தரும் உயிர் ஒளி அனாதி காலமாய்த் தொன்றுதொட்டு கால தத்துவம் எனப் பெயருடைய அநிர்வசனீய மாயாவிசிஷ்டனான ஈசனுக்குள் அனாதியான கர்ம பரிபாக வசத்தால் பல்வேறு உடல்கள் எடுத்து மாறி மாறிப் பிறவி எய்துகிறது என்பதே, சாஸ்திரங்களுடைய கருத்தும் ஆன்றோர்களுடைய அனுபவமுமாகும்.
மக்கள் பெற்றுள்ள யாக்கையின் பயன், பிறவிப் பெருங்கடல் கடந்து, தங்களது ஸ்வபாவ ஸ்வரூபமான பேரருள் ஒளி வடிவத்தை அடைந்து, இன்புற வேண்டுவதே ஆகும்.
வேதங்கள், உபநிஷத்துகள், உண்மை அனுபூதி பெற்ற மகரிஷிகள் இவர்களின் உபதேசமும் இதுவே!
ஆகவே, உயிர்கள் தம்முள் உறையும் ஒப்பற்ற அறிவு வடிவமாயுள்ள பேரொளியால் தத்தம் வினைப் பயனுக்கீடாகவே இயங்குகின்றன. இந்த இயக்கத்துக்குக் காரணமாயுள்ள பேரொளியில் மக்களிடையே ஆசை எனும் பெரும் காற்றடித்து, மக்களை மயக்கத்தில் ஆழ்த்துகிறது. இந்த மயக்கத்தால் மக்கள் தம்முள் ஒளிரும் உயிர் ஒளியை மறந்து, இருளுற்று, உண்மை நிலை உணராமல், துன்புறுகின்றனர்.
இவ்விருளைப் போக்க, ஒரு பேரொளி எனும் வெளிச்சம் இயங்க வேண்டியது இன்றியமையாததாக இருக்கிறது.
காலநிலைமைக்கு ஏற்றபடி இவ்வுலகில் பல்வேறு ஒளிகள் இயங்குகின்றன. எனினும், மக்கள் தம் உயிர் ஒளியை உணர முடியாமல் மயக்கமுற்றவர்களாகவே இருக்கின்றனர். உள் ஒளியை உணர்ந்தாலன்றி மக்களின் மயக்க இருள் ஒழியாது; பிறவிக்கடல் கடந்து பேரின்ப நிலையைப் பெறுவதும் சாத்தியமில்லை!
இந்த லட்சியத்தை அடையும் பொருட்டு. நம்முள் உதய அஸ்தமனம் இல்லாமல், ஒரு பேரருள் வடிவமான இயற்கை ஒளி உள்ளது என்பதைக் குறிப்பாய் மக்களுக்கு உணர்த்துவதற்காகவே, ‘ஞானஒளி’ எனும் பெயர் அமைத்து, ஒரு சஞ்சிகையை மக்களிடையே வெளியிடுவதற்குத் தக்க சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.
இதைக் கண்ணுறும் கற்றோரும் மற்றோரும் இச்சந்தர்ப்பத்தை முற்றும் பயன்படுத்திக் கொண்டு, உள்ளென்றும் புறமென்றும் பிரிவில்லாத பேரின்ப வெளியை உணர்ந்து, துக்கம் கலவாத அழியாத பேரின்பப் பெருவாழ்வு எய்துவார்களாக!

ஸற்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகளின்
அருள்மொழிகள்
சுறுசுறுப்பாயிரு – ஆனால் – படபடப்பாயிராதே;
பொறுமையாயிரு – ஆனால்- சோம்பலாயிராதே;
சிக்கனமாயிரு – ஆனால் – கருமியாயிராதே;
அன்பாயிரு – ஆனால் – அடிமையாயிராதே;
இரக்கங்காட்டு – ஆனால் – ஏமாந்து போகாதே;
கொடையாளியாயிரு – ஆனால் – ஓட்டாண்டியாய் விடாதே;
வீரனாயிரு – ஆனால் – போக்கிரியாயிராதே;
இல்லறத்தை நடத்து – ஆனால் – காமவெறியனாயிராதே;
பற்றற்றிரு – ஆனால் – காட்டுக்குப் போய்விடாதே;
நல்லோரை நாடு – ஆனால் – அல்லோரை வெறுக்காதே!
